Fatwas

பொதுவான ஃபத்வாக்கள்

கேள்வி: மஷ்வராவில் பெண்களின் கருத்துக்கு மாறு செய்யுங்கள் என்று கூறப்படுவது ஹதீஸா? 

  ஹள்ரத் அலீ (ரலி) அவர்கள் மரத்தில் ஏறியிருக்கும் போது ஹள்ரத் ஃபாத்திமா (ரலி) அவர்கள் அந்த பெரிய கிளையைப் பிடித்துக் கொள்ளுங்கள் என்று கூறியதும் 'பெண்களின் ஆலோசனைக்கு மாறு செய்ய வேண்டும்' என்று அவர்கள் சிறிய கிளையைப் பிடித்தார்கள். கீழே விழுந்தார்கள்.. பிறகு பெரிய கிளையைப் பார்த்தால் அதில் விஷப் பாம்பு இருந்தது என்று ஒரு சம்பவத்தைக் கூறி பெண்களின் ஆலோசனைக்கு மாறு செய்ய வேண்டும் என்று கூறுகிறார்களே? இது சரியா? விளக்கம் தேவை. 


பதில்: மஷ்வராவில் பெண்களின் கருத்துக்கு மாறு செய்யுங்கள் என்ற ஹதீஸ் ஆதாரமற்றது.

 குர்ஆன், ஹதீஸில் தெளிவாக தீர்வு சொல்லப்பட்டிருக்கும் வியங்களைத் தவிர ஏனைய முக்கியமான தீன் மற்றும் உலக சம்பந்தப்பட்ட அனைத்து காரியங்களிலும் மஷ்வரா செய்து அதன் முடிவின் படி நடந்து கொள்வது சிறப்பையும் பரக்கத்துகளையும் பெற்றுத் தரும். 

"(நபியே!) காரியங்களில் அவர்கள் (முஃமின்கள்) உடன் கலந்தாலோசனை செய்து கொள்ளுங்கள்" (அல்குர்ஆன் 3:159) 

என்று அல்லாஹ் கட்டளையிடுகிறான். பெண்களின் கருத்துக்கு மாறு செய்யுங்கள் என்ற ஹதீஸ் ஆதாரமற்றது. அதனடிப்படையில் தாங்கள் கேள்வியில் குறிப்பிட்ட சம்பவமும் ஆதாரமற்றது. இதற்கு மாற்றமாக நபி (ஸல்) அவர்கள் பெண்களின் ஆலோசனையை ஏற்று அமல்படுத்தியதாகத்தான் நமக்கு தகவல் கிடைக்கிறது. ஹுதைபிய்யா உடன்படிக்கையில் உம்மு ஸல்மா (ரளி) அவர்களின் ஆலோசனையின் பேரில்தான் நபி (ஸல்) அவர்கள் முதலில் தலை முடி இறக்கினார்கள். அந்த ஆலோசனை சிறந்த முடிவையும் தந்தது. குர்ஆனிலும் தலாக் சம்பந்தப்பட்ட விஷயங்களில் பெண்களிடம் ஆலோசனை செய்யுங்கள் என்று அல்லாஹ் கூறுகிறான். (அல்குர்ஆன் 2:233) எனவே, பெண்கள் உட்பட மஷ்வராவில் உள்ள அனைவரும் கருத்து சொல்லலாம். அதில் பெண்களின் ஆலோசனை சிறந்ததாக தென்பட்டால் பெண்களின் ஆலோசனையை செயல்படுத்தலாம். மஷ்வராவில் ஒரு முடிவு எட்டிய பின் அல்லாஹ்வின் மீது தவக்குல் வைத்து அந்த முடிவின் படி செயல்பட வேண்டும்.

கேள்வி: மஸ்ஜிதில் வியாபாரம் செய்யலாமா? கூடாது எனில் உள்பள்ளி, வெளிப்பள்ளி என அதில் வித்தியாசம் உண்டா? அப்படி வியாபாரம் நடந்தால் அதில் நாம் பொருட்கள் வாங்கினால் தவறுக்கு துணை போவதாக ஆகுமா? 


பதில்: தொழுகைக்காக வக்ஃபு செய்யப்பட்ட இடத்தில் அங்கு தொழுகையும் ஜமாஅத்தாக நடைபெற்று வந்தால் அது உள்பள்ளியாக இருந்தாலும் வெளிப்பள்ளியாக இருந்தாலும் அங்கு வியாபாரம் செய்வது பொருள் வாங்குவது என எதற்கும் அனுமதி கிடையாது.

"மஸ்ஜிதில் விற்பதையும் வாங்குவதையும் நபி (ஸல்) அவர்கள் தடை செய்தார்கள்" (நூல்: அபூதாவூத்)

 ஆனால் தொழுகைக்காக வக்ஃபு செய்யப்படாத, தொழுகையும் நடக்காத வெளிப்பகுதியில் விற்பதும் வாங்குவதும் கூடும். (ஃபதாவா ரஹீமிய்யா 15/269)